விமானத்தில் 11 மாத குழந்தை மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு

கத்தாரிலிருந்து ஐதராபாத் வந்த விமானத்தில் 11 மாத குழந்தை மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-26 12:08 GMT

தோஹாவிலிருந்து ஐதராபாத் வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் தம்பதியினர் 11 மாத ஆண் குழந்தை அர்னவ் வர்மாவுடன் பயணம் செய்தனர். ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் சற்று நேரத்தில் தரையிறங்க இருந்த நிலையில் அர்னவ் வர்மாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தை மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளது. இதனையடுத்து பெற்றோரும், விமான பணியாளர்களும் முதலுதவியை வழங்க முயற்சித்தனர். இதற்கிடையே விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் உடனடியாக தரையிறங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பாக அங்கிருக்கும் மருத்துவமனை உஷார்படுத்தப்பட்டது.

 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் படுத்தப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என கூறியுள்ளனர். குழந்தை உயிரிழந்ததால் துயரம் தாங்க முடியாமல் பெற்றோர் கதறி அழுதனர். குழந்தையை காப்பாற்ற ஏற்பாடுகள் செய்தும் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் உள்ளது.

 “மிகவும் சோகமான செய்தி எங்களுக்கு தெரியவந்துள்ளது. குழந்தைகளின் பெற்றோருக்கு எங்களுடைய இரங்கலை தெரிவிக்கிறோம், எங்களுடைய எண்ணம் எல்லாம் அவர்களுடனே உள்ளது,” என்று கூறியுள்ளது கத்தார் ஏர்வேஸ்.

மேலும் செய்திகள்