கர்நாடகாவில் டீ குடித்து கொண்டிருந்த முன்னாள் மேயர் பொது மக்கள் முன்னிலையில் படுகொலை

கர்நாடகாவில் துமகுரு நகரில் டீ குடித்து கொண்டிருந்த முன்னாள் மேயர் ஒருவர் பொது மக்கள் முன்னிலையில் வெட்டி கொல்லப்பட்டார்.

Update: 2018-09-30 11:36 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவர் ரவி குமார்.  சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இவர் பின்னர் அரசியலில் இணைந்து துமகுரு மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும் இருந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், துமகுரு நகரில் படவாடி பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் இன்று டீ குடித்து கொண்டு இருந்துள்ளார்.  அந்த வழியே வந்த 2 பேர் திடீரென இவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.  இதனால் அங்கிருந்து தப்ப முயன்ற அவரை மற்ற 5 பேர் சூழ்ந்து கொண்டு ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.  இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அந்த பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தினை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது.

ரவிக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.  பழைய பகையால் இந்த கொலை நடந்திருக்க கூடும் என போலீசார் கூறியுள்ளனர்.  குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்