நியூட்ரினோ ஆய்வு மைய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

Update: 2018-10-09 22:30 GMT
புதுடெல்லி,

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் டாடா நிறுவனம் சமர்பித்த ஒரு மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 5-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், டாடா நிறுவனம், தமிழக அரசு உள்ளிட்டோர் தங்கள் முக்கியமான வாதங்களை தேவையான புள்ளி விவரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 9-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘கடினமான பாறைகள் இருப்பதால், தேனி பகுதியில் வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான 31.44 ஹெக்டேர் நிலத்தை இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டம் தொடர்பான செயல்பாட்டு நிபந்தனைகள் எவற்றையும் மாநில அரசிடம் மத்திய அரசு கேட்கவில்லை. எனவே, மாநில அரசு சார்பாக இந்த திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நேரடியாக அனுமதி வழங்கி உள்ளது. இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான அரசு மதிப்பீட்டு நிறுவனம் ஆகியவை மாலைக்குள் எழுத்துபூர்வமான பதிலை தாக்கல் செய்வதாக தீர்ப்பாயத்தில் உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்