சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை கேரள அரசு சரியாக அணுகவில்லை டி.டி.வி.தினகரன் பேட்டி

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை சரியாக அணுகவில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-10-22 22:45 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கேரள அரசு சரியாக அணுகவில்லை

சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை கேரள அரசு சரியாக அணுகவில்லை. சுப்ரீம் கோர்ட்டு சட்டத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு கோவிலில் பின்பற்றப்படும் விதிமுறை, பண்பாடு என்னவென்று கேரள அரசு தான் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக்கூறி வாதிட்டு இருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை திருத்தம் செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், கேரள அரசு சார்பிலும் மறுஆய்வு மனு தாக்கல் செய்து முறையாக வாதாடி நல்ல தீர்ப்பை பெற வேண்டும்.

மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்

இடைநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளது. குடிநீர், சாலை வசதி உள்பட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் மற்றும் ஆர்.கே.நகர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி ஆகிய 4 தொகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும். இந்த 4 தொகுதி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கும், முதல்-அமைச்சருக்கும் எதிராக இருப்பதால் தனிநபர் மீதான வெறுப்பில் 2½ லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்