ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் 10 பேர் கைது

ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-24 21:45 GMT
நகரி,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஜில்லேடு மந்தா, மந்தம் பாடு ஆகிய பகுதிகளில் உள்ள சேஷாசலம் மலை காடுகளில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் 2 இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜில்லோடு மந்தா பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த தயாராக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 60 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் 6 பேரை கைது செய்தனர். அதே போல் மந்தம் பாடு பகுதியில் 16 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்றும் கைது செய்யப்பட்ட 10 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்