சபரிமலை விவகாரம் கேரளா கூட்டிய கூட்டம் தென்மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் புறக்கணிப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு கூட்டிய கூட்டத்தில் தென்மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

Update: 2018-10-31 14:17 GMT
திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து, எல்லா வயது பெண்களையும் அனுமதித்து கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பெண்கள் அமைப்பினர் வரவேற்றாலும்கூட, பக்தர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கேரள அரசு அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டது. ஐப்பசி மாத வழிபாடு முடிந்து 22-ம் தேதி நடை சாத்தப்பட்டு விட்டது. இந்த காலகட்டத்தில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என கூறி, சபரிமலை பகுதியில் பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவுக்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. அவர்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

போராட்டம் தொடர்பாக 3500–க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்களை மாநிலம் முழுவதும் கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கேரளாவில் இந்து அமைப்புகள், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளன. சுப்ரீம் கோர்ட்டிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் சீசன் விரைவில் தொடங்குகிறது. இதையொட்டி, தென் மாநிலங்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேரள அரசு கேட்டுக் கொண்டு இருந்தது. மேலும் இது தொடர்பான தென்மாநில அறநிலையத்துறை மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்துக்கும் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. பினராயி விஜயன் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அறநிலையத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதேநேரம் இந்த துறைகளின் உயர் அதிகாரிகளை மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க இந்த மாநிலங்கள் அனுப்பி வைத்திருந்தன. இதனால் அதிருப்தி அடைந்த முதல்–மந்திரி பினராயி விஜயன் கூட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றவேண்டிய கடமை கேரள அரசுக்கு உள்ளது. எனவே இந்த வி‌ஷயத்தில் தென் மாநிலங்கள் கேரளாவுக்கு ஒத்துழைக்கவேண்டும்’’ என்று  கேரள தேவசம் போர்டு மந்திரி கடக்கம்பள்ளி சுரேந்திரன் கேட்டுக் கொண்டார். 

மேலும் செய்திகள்