காஷ்மீரில் நில சரிவு: 9 வயது சிறுமி பலி, 3 பேர் காயம்; 200 பேர் மீட்பு

காஷ்மீரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பலியானாள். அவரது குடும்பத்தின் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-11-04 07:38 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.  இன்று 2வது நாளாக ஸ்ரீநகரில் விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜம்முவில் பனிப்பொழிவை அடுத்து பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டு உள்ளது.  இதில் ரஜவுரி மாவட்டத்தில் சத்யார் கிராமம் அருகே ஒரு குடும்பத்தினர் அமைத்திருந்த கூடாரம் நில சரிவில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் சபீனா கவுசர் (வயது 9) என்ற சிறுமி பலியானாள்.  அவர்களது குடும்பத்தின் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.  உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் பல நில சரிவுகளால் வாகனங்களில் சிக்கி இருந்த 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பனிஹல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பு முகாம்கள், ஓட்டல்கள் மற்றும் மத தலங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  இதில் ஜம்மு நோக்கி சென்ற பாதுகாப்பு படையினரின் வாகனமும் சிக்கி கொண்டது.  அதில் இருந்து வீரர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்