சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு எதிர்ப்பு; பக்தர்கள் போராட்டம்

சபரிமலை தரிசனத்திற்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2018-11-06 03:39 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் வராததால், அசம்பாவிதம் எதுவும் இன்றி நேற்று கோவிலில் பூஜை அமைதியாக நடைபெற்றது.

இந்த நிலையில், சபரிமலைக்கு 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் ஒருவர் தரிசனம் செய்ய வந்துள்ளார் என கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பிஜு என்பவர் காயமடைந்து உள்ளார்.

தொடர்ந்து பக்தர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதேபோன்று தரிசனத்திற்கு வந்த பெண்ணிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்