மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: “நன்றாக திட்டமிடவில்லை” - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சாடல்

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நன்றாக திட்டமிடவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-08 22:45 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அதிரடியாக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.

இந்த நடவடிக்கை எடுத்து 2 ஆண்டுகள் முடிந்தும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. அது எதிர்பார்த்த நோக்கங்களை அடையவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.

இதுபற்றி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறினார்.

சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் ரகுராம் ராஜனின் கருத்தை எதிரொலித்துள்ளார். அப்போது அவர், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல யோசனை என்று எந்தவொரு பெரும் பொருளாதார நிபுணரும் கருதுவார் என நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது ஏற்றதல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், “சரியாக வழிகாட்டாமல், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு தலைபட்சமாக ஏவிய ஏவுகணை இது” என சாடி உள்ளார்.

மேலும் செய்திகள்