உத்தர பிரதேசத்தில் மனைவிக்காக குட்டி தாஜ் மஹால் கட்டியவர் விபத்தில் பலி

உத்தர பிரதேசத்தில் மனைவிக்காக குட்டி தாஜ் மஹால் கட்டியவர் விபத்தில் பலியாகி உள்ளார்.

Update: 2018-11-11 02:24 GMT
லக்னோ,

முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மீது அதிக அன்பு கொண்டவர்.  மும்தாஜ் மறைவுக்கு பின்னர் அவரது நினைவாக பளிங்கு கற்களால் ஆன தாஜ் மஹால் என்ற நினைவு சின்னத்தினை ஆக்ரா நகரில் ஷாஜகான் எழுப்பினார்.  இது மனைவி மீது கணவன் கொண்ட அன்பின் வெளிப்படுதலாக இன்றும் உள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் வசித்து வந்த பைசுல் ஹசன் கத்ரி என்பவர் தனது மனைவி தாஜா முள்ளி பீபி மீது அதிக அன்பு வைத்திருந்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் கடந்த 1953ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு பீபி இறந்து விட்டார்.  அவரது நினைவாக குட்டி தாஜ் மஹால் ஒன்றை எழுப்ப ஹசன் முடிவு செய்துள்ளார்.

அதன்படி அவர் குட்டி தாஜ் மஹாலுக்கான அடித்தளத்தினை அமைத்துள்ளார்.  ஆனால் தொடர்ந்து அதனை கட்டி முடிக்க போதிய நிதி வசதி இல்லை.  இந்த தகவல் பரவிய நிலையில், முன்னாள் முதல் அமைச்சரான அகிலேஷ், நிதியுதவி செய்வதற்காக ஹசனை அழைத்துள்ளார்.

ஆனால் அகிலேஷின் உதவியை ஏற்க மறுத்த ஹசன் தனது கிராமத்தில் மகளிருக்கான கல்லூரியை அமைத்து தரும்படி கோரினார்.  இதனை தொடர்ந்து அங்கு கல்லூரி அமைக்கப்பட்டது.  இதற்காக ஹசன் தன்னிடம் இருந்த நிலத்தினையும் வழங்கியுள்ளார்.

ஹசன் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.  அவர் சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தினை கொண்டு குட்டி தாஜ் மஹாலை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளார்.  அதற்காக பளிங்கு கற்களை வாங்க ஜெய்பூருக்கு செல்ல முற்பட்ட அவர் விபத்து ஒன்றில் பலியாகி உள்ளார்.

ஷாஜகான் தனது மனைவி அருகில் புதைக்கப்பட்டது போன்று, ஹசனை மனைவியின் உடல் அருகே புதைக்க உறவினர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்