ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதலுக்கு இடையே பிரதமரை ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தித்ததாக தகவல்

ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதலுக்கு இடையே பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-13 05:33 GMT
புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவி வகித்து வருகிறார். ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.

கடந்த மாதம் 26-ந் தேதி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா, இந்த பூசலை வெளிப்படுத்தினார். “ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மதிக்காத அரசு, கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார். 

இவ்வாறாக ரிசர்வ் வங்கி மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. இவ்வாறாக, மத்திய அரசு ரிசர்வ் வங்கி இடையே மோதல் வெளிப்படையாக தெரிந்த நிலையில், வரும் 19-ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யலாம்  என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இதனை நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்தநிலையில்,  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது, நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

 இதுமட்டுமின்றி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும், ஆனால் இதற்கு நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றியும் உர்ஜித் படேல் பிரதமரிடம் விளக்கியுள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் உர்ஜித் படேல் சந்தித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்