சபரிமலை விவகாரம்: திருப்தி தேசாய் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் -கேரளா அமைச்சர் விளாசல்

சபரிமலை செல்வதற்காக கேரளா சென்ற திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் அய்யப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

Update: 2018-11-16 09:37 GMT
கொச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. இருப்பினும் ஆளும் இடதுசாரி அரசு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் ஸ்திரமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் இருமுறை சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் போராட்டம் காரணமாக பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 

போராட்டம் தொடரும் நிலையில் இன்று மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் இன்று திறக்கப்படுகிறது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பதற்ற நிலை தொடர்கிறது.
 
இதற்கிடையே பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று கூறி கேரளாவிற்கு சென்றார். காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் சென்ற அவர் வெளியே பிரவேசிக்க முடியாத வகையில் போராட்டக்குழுவினர் குவிந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டு உள்ளதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் அரசியலாக்கப்படுகிறது, பா.ஜனதா அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது எனவும் ஆளும் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பதற்கு காங்கிரசும், பா.ஜனதாவும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை சேர்ந்த அமைச்சர் சுஷில் குமார் பேசுகையில், “திருப்தி தேசாய் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். அவர் கோவிலுக்குள் நுழைவதற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் உள்ளது. அவர்களுடைய போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு எதிரானது. புனேவிலிருந்து வந்துள்ளார். பிறகு ஏன் அவரை கொச்சி விமான நிலையத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். வழிமறிக்க வேண்டும்? அவரை கேரளாவில் மட்டும் தடுப்பது ஏன்?” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள தேசாய், “எனக்கு அரசியலில் எல்லாம் நாட்டம் கிடையாது. என்னை அவமறியாதை செய்ய வேண்டாம் என்று தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினர்தான் எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். சமஉரிமைக்காக போராடுகிறேன், உங்களுடைய அரசு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் எங்களை அவமதிக்க வேண்டாம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்