கெஜ்ரிவாலை சந்திக்க வந்த நபர் தோட்டாக்களுடன் பிடிபட்டதால் பரபரப்பு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு தோட்டாக்களுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-27 07:50 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை மிளகாய்பொடியை வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.  முதல்-மந்திரி  அலுவலகத்துக்கு வெளியிலேயே நடைபெற்ற இச்சம்பவம்  முதல்வரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்வியை எழுப்பி இருந்தது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த  கெஜ்ரிவால், ‘டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளது. இதையெல்லாம் பொறுக்க முடியாத பாஜக தான், மிளகாய் பொடி வீசி என் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு, தோட்டாக்களுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தன்னை மதகுரு என்று சொல்லிக் கொண்ட முகம்மது இம்ரான் என்ற அந்த நபர், நேற்று முதல்வரைப் பார்க்க அவரது இல்லத்துக்கு வந்துள்ளார். 

ஜன்தா தர்பார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 12 மதகுருக்களில் இவரும் அடங்குவார். தனக்கு கொடுக்கப்படும் சம்பளம் போதவில்லை என்றும், முதல்வரிடம் சம்பள உயர்வு குறித்து பேச வேண்டும் என தான் வந்ததாக முகம்மது இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், இம்ரானை சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவரிடம் தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீசார் விசாரிக்கும் போது, தான் ஒரு மசூதியின் கேர்டேக்கராக பணியாற்றி வருவதாகவும், கடந்த மாதம் தனக்கு வந்த ஒரு நன்கொடை பெட்டகத்தில், துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அவற்றை எடுத்து தனது பர்சில் வைத்துக்கொண்டேன். பர்சில் தோட்டாக்கள் இருந்தது நினைவு இல்லாமல் தான், முதல்வர் இல்லத்திற்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்