சபரிமலை விவகாரம்: கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2018-11-28 23:55 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மகரவிளக்கு–மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த கெடுபிடி நடவடிக்கைகள் கேரள சட்டசபையிலும் நேற்று பெரும் புயலை கிளப்பியது. காலையில் சபை கூடியதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றனர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சபரிமலை சுற்றுவட்டாரத்தில் போடப்பட்டுள்ள தடை உத்தரவு மற்றும் அங்கு தேவையின்றி மேற்கொள்ளப்படும் கெடுபிடிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இது தொடர்பாக முதல்–மந்திரிக்கு எதிராக பல்வேறு கோ‌ஷங்களையும் எழுப்பினர். மேலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக்கொண்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு முதல்–மந்திரி பினராயி விஜயன் பதிலளிக்க முயன்றார். ஆனால் அவரை பேசவிடாமல் இடையூறு செய்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகரை முற்றுகையிட முயன்றனர். இதனால் சட்டசபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் சிறிது நேரம் சபை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார்.

பின்னர் சபை நிகழ்வுகள் மீண்டும் தொடங்கிய போது முதல்–மந்திரி பினராயி விஜயன் பேசினார். அவர் கூறுகையில், ‘சபரிமலையில் பக்தர்கள் போர்வையில் நுழைந்துள்ள ஒரு சிறிய குழுவினர் உண்மையான பக்தர்களை தடுத்து, நம்பிக்கை என்ற பெயரில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதற்காக சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றன’ என்று குற்றம் சாட்டினார்.

சபரிமலையை வன்முறை களமாக மாற்றுவதற்கு மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய அவர், உண்மையான பக்தர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், அவர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் சபரிமலையில் போலீஸ் ஆட்சி நடந்து வருவதாக குற்றம் சாட்டிய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சிவகுமார், அங்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்வதற்கு போலீசார் தடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபையின் நடுப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். முன்னதாக சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர் ராஜகோபால் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடையில் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்