சபரிமலை விவகாரம்: 2-வது நாளாக கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில் 2-வது நாளாக இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-29 07:29 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த கெடுபிடி நடவடிக்கைகள் கேரள சட்டசபையிலும் நேற்று பெரும் புயலை கிளப்பியிருந்தது. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. சபரிமலை விவகாரம் குறித்து பேரவையில் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவை துவங்கியதும் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்ற  உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் பி ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கோரிக்கை விடுத்தனர். சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்திய பதாகைகளையும் சில உறுப்பினர்கள் கைகளில் வைத்திருந்தனர்.

ஆனால், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் கேள்வி நேரத்தை துவங்கினார். எனினும், உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால்,  சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று அவை துவங்கிய 20-வது நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்