டெல்லியில் புதிய வருவாய்த்துறை செயலாளர் பொறுப்பேற்பு

டெல்லியில் புதிய வருவாய்த்துறை செயலாளர் பொறுப்பேற்றுள்ளார்.

Update: 2018-11-30 21:45 GMT
புதுடெல்லி,

மத்திய வருவாய்த்துறை செயலாளராக இருந்த ஹஸ்முக் அதியா பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய செயலாளராக அஜய் பூஷண் பாண்டே நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை முன்னாள் செயலாளர் ஹஸ்முக் அதியா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அஜய் பூஷண் பாண்டே, வரி-ஜி.டி.பி. விகிதத்தை உயர்த்துவதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்போவதாக கூறினார். மேலும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் ஸ்திரத்தன்மை, வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டங்களை எளிமையாக்குதல் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேரடி மற்றும் மறைமுக வருவாய் சீர்திருத்தத்தில் பொதுமக்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இது வரி செலுத்துவோருக்கு சிறந்த சேவையாற்றுவதற்கு உதவும் எனவும் கூறினார்.

மராட்டிய பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜய் பூஷண் பாண்டே, மத்திய-மாநில அரசு பதவிகளில் 34 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்