தேர்தல் பிரசாரம் - வெளிநாட்டு பயணங்கள்: 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரம் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் என 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கி வருகிறார்.

Update: 2018-12-01 22:45 GMT
புதுடெல்லி,

தேர்தல் பிரசாரம் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் என 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கி வரும் பிரதமர் மோடியின் உழைப்பு பா.ஜனதாவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் இந்த தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

எனவே இந்த தேர்தல் வெற்றிக்காக கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், மத்திய மந்திரிகள், மாநில தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தேர்தலுக்கு முன்னுரிமை அளித்து செயல்படும் பிரதமர் மோடியும், பா.ஜனதாவினரின் வெற்றிக்காக தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளார்.

இந்த தேர்தல் பிரசாரங்களுடன் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதால் கடந்த சில நாட்களாக 24 மணி நேரமும் பயணத்திலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் அவர் ஓய்வின்றி செயல்பட்டு வருகிறார்.

மிசோரத்தில் 23-ந் தேதி தீவிர பிரசாரத்தை தொடங்கிய அவர் 28-ந் தேதி வரை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளியாக சுற்றி வந்து வாக்கு சேகரித்தார். 28-ந் தேதி கூட விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் 7 மணிநேர பயணம் மேற்கொண்டு ராஜஸ்தானில் 2 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் டெல்லி வந்த அவர் வெறும் 90 நிமிட நேரத்துக்குள் அர்ஜென்டினா புறப்பட்டார். ஜி20 மாநாட்டுக்காக சென்ற அவர் சுமார் 25 மணி நேரத்தை விமானத்திலேயே கழிக்க வேண்டியிருந்தது. அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் 2 இரவுகள் உள்பட 50 மணி நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை பிரதமர் மோடி டெல்லி வந்து சேர்கிறார். இதற்காக மேலும் ஒரு 25 மணி நேர நீண்ட பயணத்தை முடிக்கும் அவர், அடுத்த 12 மணி நேரத்துக்குள் தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்புகிறார்.

அதன்படி ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரங்களில் அவர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக கடந்த மாதத்தின் மத்தியில் சத்தீஷ்கார் தேர்தல் பிரசாரத்துக்கு இடையிலும் பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் என பம்பரமாய் சுற்றிவரும் பிரதமர் மோடியின் ஓய்வில்லா செயல்பாடு பா.ஜனதாவினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்