கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக பா.ஜனதா கருப்பு கொடி போராட்டம்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக, பா.ஜனதா கருப்பு கொடி போராட்டம் நடத்தியது.

Update: 2018-12-02 22:45 GMT
சபரிமலை,

பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயனை கண்டித்து பா.ஜனதா இளைஞர் அணி பல இடங்களில் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது.

சபரிமலையில் அய்யப்பபக்தர்கள் மீதான போலீஸ் கட்டுப்பாடுகளை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மாநில பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுரேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜனதா இளைஞர் அணி நேற்று பல்வேறு இடங்களில் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது.

கேரள மாநிலம் செங்கன்னூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க நேற்று காலை முதல்-மந்திரி பினராயி விஜயன் சென்று கொண்டிருந்தார். அப்போது பா.ஜனதா இளைஞர் அணியினர் முதல்-மந்திரி காருக்கு முன்னால் வந்து கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மற்றொரு பிரிவினர் ரெயில் நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் சிறிது தூரம் முன்பே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விழா நடைபெறும் இடத்தில் அய்யப்ப சரணத்துடன் போலீஸ் அராஜகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன் போலீஸ் தடை உத்தரவை மீறி நிலக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா சமீபத்தில் கொச்சி வந்தபோது கேரளாவில் நிலவும் அரசியல் நிலை குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட கமிட்டியை அறிவித்தார். அந்த கமிட்டியினர் வருகிற 15-ந் தேதிக்குள் அமித்ஷாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அந்த கமிட்டியினர் 4 பேரும் நேற்று கவர்னர் பி.சதாசிவத்தை சந்தித்து, அய்யப்ப பக்தர்கள் மீதான போலீஸ் கட்டுப்பாடுகள், பா.ஜனதா தலைவர்கள் மீதான கொடுமைகள் ஆகியவை குறித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

பின்னர் 4 பேரும் பந்தளம் அரண்மனை பிரதிநிதிகளையும், வேறு சில போராட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை திருவனந்தபுரம் பூஜப்புரா சிறையில் இருக்கும் சுரேந்திரனை சந்திக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

மேலும் செய்திகள்