மெரினாவில் போராட்டம் நடத்த தடை - அய்யாக்கண்ணு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

Update: 2018-12-03 22:00 GMT
புதுடெல்லி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் மெரினாவில் போராட்டம் நடத்த ஒரு நாள் அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

அத்துடன், வள்ளுவர் கோட்டம் உள்பட அரசு குறிப்பிடும் 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை மனுதாரர் தேர்வு செய்து அங்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி புதிதாக மனு கொடுத்தால், அதை போலீசார் முறையாக பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அய்யாக்கண்ணு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் “இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட இயலாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக வேறு ஏதேனும் மனுக்கள் நிலுவையில் இருந்தால் அவையும் முடித்து வைக்கப்படுகின்றன என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.



மேலும் செய்திகள்