நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு பின்னடைவு

சோனியா, ராகுலின் 2011-12 ஆம் ஆண்டு வருமான வரி கணக்கை, வருமான வரித் துறையினர் மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Update: 2018-12-04 08:34 GMT
புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா ஆகியோரின் யங் இந்தியன் நிறுவனம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி அளவுக்கு கடன் அளித்ததை காரணம் காட்டி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இதனிடையே இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு, ராகுல், சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கினர். 2011-12ஆம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.68 லட்சம் என்று ராகுல் கணக்கு காட்டியுள்ளதாகவும், ஆனால் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் அவருக்கு அந்த ஆண்டு கிடைத்த வருவாய் ரூ.154 கோடி என்றும் வருமான வரித்துறை தெரிவித்தது.
 
ஆனால் 2011-12 ஆம் ஆண்டு வருமான வரி கணக்கை, வருமான வரித்துறையினர் மறு ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து சோனியா, ராகுல் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், சோனியா, ராகுலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இதில், வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஆய்வு செய்ய அனுமதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இது இறுதி உத்தரவு இல்லை எனவும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்