எனது சகோதரரை போலீசாரே திட்டமிட்டு கொன்று விட்டனர்; சுபோத் சிங்கின் சகோதரி குற்றச்சாட்டு

பசு வதை வழக்கை விசாரித்த எனது சகோதரரை போலீசார் திட்டமிட்டு கொன்று விட்டனர் என காவல் துறை ஆய்வாளரின் சகோதரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-12-04 13:39 GMT
லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர்  மாவட்டத்தில் உள்ள மஹவ் கிராமத்தின் வயல்வெளியில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்தன. இதை கண்டு பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்களும், கிராமத்தினரும் ஆத்திரமடைந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். 

பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றி கொண்டு புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது  ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தது.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் கல்வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் சுமித் (வயது 20) என்ற வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார்.

இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  87 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பசு வதை செயலில் ஈடுபட்டு இறைச்சியை உண்டனர் என்ற வதந்தியில் தாத்ரி பகுதியில் வசித்து வந்த முகமது அக்லக் என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.  இந்த வழக்கை காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கின் சகோதரி சுனிதா சிங், பசு வதை வழக்கை விசாரித்த எனது சகோதரரை போலீசாரே திட்டமிட்டு கொன்று விட்டனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்.

எனது சகோதரருக்கு வீரமரணத்திற்கான அந்தஸ்து தர வேண்டும்.  எங்களது ஊரில் அவரது பெயரில் நினைவகம் ஒன்றையும் எழுப்ப  வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுபோத் சிங்கின் மகனான அபிசேக் சிங் கூறும்பொழுது, கடைசியாக என்னிடம் பேசிய அவர், எனது படிப்புகளை பற்றி கேட்டார்.  சாப்பிட்டு  விட்டாயா? என்றும் கேட்டார் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்