ஜாமீன் வழங்க கோரி முருகன், கருப்பசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு - தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

ஜாமீன் வழங்க கோரி முருகன், கருப்பசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

Update: 2018-12-04 22:30 GMT
புதுடெல்லி,

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி ஐகோர்ட்டு இந்த ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இதனை தொடர்ந்து இவர்கள் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது முருகன், கருப்பசாமி ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்ஜய் ஆர்.ஹெக்டே, வக்கீல் இர.நெடுமாறன் ஆகியோர், ‘இந்த வழக்குக்கும், மனுதாரர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. அவர்கள் தவறாக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனுவின் பிரதியை தமிழக அரசு வக்கீலிடம் ஒப்படைக்குமாறும், இதுதொடர்பாக தமிழக போலீசார் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.




மேலும் செய்திகள்