தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Update: 2018-12-07 07:36 GMT
மதுரை,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 18,600 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

புறநோயாளிகளின் சிகிச்சையை நாளை முதல் முற்றிலுமாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்  மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகளின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.  அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு, ஐகோர்ட்  மதுரைக் கிளையில் இந்த தகவலை தெரிவித்தது.

மேலும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, ஒருநபர் குழு எப்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும், அதை நிறைவேற்ற எவ்வளவு காலமாகும்  எனவும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர் வரும் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்