குறைந்த வட்டியில் கேரளாவுக்கு ரூ.720 கோடி கடன் - ஜெர்மனி வழங்குகிறது

ஜெர்மனி நாடு, குறைந்த வட்டியில் கேரளாவுக்கு ரூ.720 கோடியை கடனாக வழங்க உள்ளது.

Update: 2018-12-08 21:45 GMT
திருவனந்தபுரம்,

சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து. நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக பலியாயினர். பல லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவு காரணமாக சாலை போக்குவரத்து பல இடங்களில் அடியோடு துண்டிக்கப்பட்டது. மொத்தம் ரூ.25 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து கேரளாவின் மறு கட்டமைப்புக்காக நிதி குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலத்துக்கு ரூ.720 கோடியை கடனாக வழங்க ஜெர்மனி நாடு முன்வந்துள்ளது.

இதுபற்றி இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டின் தூதர அதிகாரி மார்டின் நேய் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறு கட்டமைப்பு பணிகளுக்காக குறைந்த வட்டியில் ரூ.720 கோடியை கேரளாவுக்கு ஜெர்மனி வழங்கும். இதுதவிர, மாநில பொதுப் பணித்துறை சாலைகள், பாலங்கள் கட்டுவதற்காக ரூ.24 கோடி வழங்கப்படும். கொச்சியின் ஒருங்கிணைந்த நீர்வழிப் போக்குவரத்தான மெட்ரோ வாட்டர் திட்டத்துக்கு ரூ.940 கோடி நிதி உதவி செய்ய ஜெர்மனி அரசு திட்டமிட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்