9 மாதங்கள் பதவி இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்னும் 9 மாதங்கள் பதவி இருக்கும் நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு காங்கிரஸ் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2018-12-10 22:45 GMT
புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நியமிக்கப்பட்டவர் உர்ஜித் பட்டேல். அவரது பதவிக்காலம் அன்று முதல் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி அவரது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன.

இந்நிலையில் அவர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை, சொந்த காரணம் என்று மட்டுமே தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 55.

அவர் தனது ராஜினாமா கடிதத்தில், “தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக நான் எனது தற்போதைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன். இத்தனை வருடங்கள் நான் பல்வேறு பொறுப்புகளில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றியது பெருமைக்குரியது, மரியாதைக்குரியது. வங்கியின் சமீபகால மகத்தான சாதனைகளுக்காக என்னுடன் கடினமாக உழைத்த அலுவலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த ராஜினாமாவுக்கு ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் தான் காரணம் என்றும், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் முயற்சியே இது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் உர்ஜித் பட்டேலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில், ‘பட்டேல் மிகப்பெரிய மரபை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது ராஜினாமா மிகப்பெரிய இழப்பு. உர்ஜித் பட்டேல் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான புத்திக்கூர்மையான, ஆழமான புரிதலும், மிக உயர்ந்த மனோதிடமும் கொண்ட பொருளாதார நிபுணர். வங்கி நடவடிக்கைகளில் இருந்த குழப்பத்தை ஒழுங்காக மாற்றியமைத்து, ஒழுக்கத்தை உறுதி செய்தவர். அவரது தலைமையின்கீழ் ரிசர்வ் வங்கி பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்றது” என்று கூறியுள்ளார்.

அதேசமயம் அவரது ராஜினாமாவுக்கு மத்திய அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா கூறும்போது, “பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றொரு நிறுவனத்தை இழிவுபடுத்தி உள்ளது. கவர்னர் உர்ஜித் பட்டேலின் வெளியேற்றத்துக்கு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை அடக்கும் மத்திய அரசின் முயற்சியே காரணம்” என்று கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அலுவல்சாராத இயக்குனர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறும்போது, “ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜினாமா என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவரது ராஜினாமா மத்திய வங்கியின் ஒருங்கிணைப்புக்கு ஒரு பின்னடைவு. அரசு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.

உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த சில நிமிடங்களிலேயே ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆச்சார்யாவும் ராஜினாமா செய்ததாக வேகமாக தகவல் பரவியது. ஆனால் இதனை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது, தவறானது” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்