ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் தி.மு.க. மனு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் தி.மு.க. மனு அளித்துள்ளது.

Update: 2018-12-12 23:16 GMT

புதுடெல்லி, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தை கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனரை அவரது அலுவலகத்தில் சந்தித்து வழங்கினார்கள்.

இதுபற்றி ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ரூ.79 கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு பின்னர் மறுதேர்தல் நடந்தது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது முறையாக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் மாறாக, போலீசை கையில் வைத்துக்கொண்டு வழக்கை ரத்து செய்திருக்கிறார்கள். கோர்ட்டை ஏமாற்றி வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் தெரியாமல் நடந்திருக்கிறது.

எனவே, அந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க தேர்தல் கமி‌ஷன், கோர்ட்டில் மனு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் சார்பில் மனு அளித்து இருக்கிறோம். அதற்கு தேர்தல் கமி‌ஷனர், ‘இதில் சட்டசிக்கல்கள் இருப்பதால் சட்ட வல்லுனர்களை அணுகி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று உறுதி அளித்து இருக்கிறார். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்