ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லி புறப்பட்டனர்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.

Update: 2018-12-13 04:01 GMT
புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 73 இடங்களும், பிற சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் 27 இடங்களும் கிடைத்தன.

இங்கு ஆட்சி அமைக்க 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆட்சி அமைக்க தேவையான பலம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.

இங்கு முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் முடிவில் முதல்-மந்திரியை கட்சித்தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய அதிகாரம் வழங்கி அசோக் கெலாட் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேறியது.

தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடந்தது. அதில் புதிய முதல்-மந்திரி தேர்வை ராகுல் காந்தியின் முடிவுக்கு விடுவதென உறுதி செய்யப்பட்டது.  இந்த போட்டியில் அசோக் கெலாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்று உள்ளனர்.

மேலும் செய்திகள்