நாடாளுமன்றத்தில் கடும் அமளி : ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மோதல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மந்திரிகள் வலியுறுத்தல்

ரபேல் விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.

Update: 2018-12-14 23:29 GMT

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானங்களை அதிக விலைக்கு வாங்குவதாகவும், ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு, நேற்று தள்ளுபடி செய்தது. இது மத்திய அரசுக்கு மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கிய நிலையில், நேற்று பா.ஜனதாவினர் காங்கிரசுக்கு எதிர் தாக்குதல் தொடுத்தனர்.

காலையில் மக்களவை தொடங்கியதும் ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு காங்கிரஸ் கட்சியினர் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர். இதற்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரபேல் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதால், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.

இந்த பிரச்சினையால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனவே சபையை 12 மணி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் சபை தொடங்கிய போதும் இதே நிலை நீடித்தது. அவையின் மையப்பகுதியில் குழுமியிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களுடன், மேகதாது பிரச்சினையை எழுப்பி அ.தி.மு.க. எம்.பி.க்களும் சேர்ந்து கொண்டனர். மேலும் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சபையில் கோ‌ஷங்களை எழுப்பினர்.

அப்போது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் காங்கிரசாருக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. ரபேல் விவகாரத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக இந்த சபையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பதுடன், அதன் மந்திரிகள் பலர் ஊழல் வழக்கில் தொடர்ந்து சிறை சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் மூழ்கிக்கொண்டு இருப்பது அவர்களுக்கு தெரியும். எனவே எங்களையும் அவர்களுடன் இழுக்கிறார்கள். ரபேல் ஒப்பந்தத்தால் நாட்டுக்கு பெரும் லாபம் ஏற்படும் என சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

எனினும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறே இருந்தனர். இதனால் சபையை நடத்த முடியாமல் போகவே, மக்களவை 17–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே ரபேல் விவகாரம் மாநிலங்களவையிலும் பெரும் புயலை கிளப்பியது. காலையில் சபை தொடங்கியதும் மேகதாது பிரச்சினையை எழுப்பி அ.தி.மு.க.வினரும், ரபேல் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா உறுப்பினர்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ரபேல் விவகாரம் தொடர்பாக சபையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால், கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு அது குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் சபையில் அமளி தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் சபை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்