காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பொதுமக்கள் 7 பேர் பலியானதால் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Update: 2018-12-15 18:09 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சிர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை சிர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் இண்டர்நெட் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது 10-க்கும் அதிகமான பொதுமக்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதல் மந்திரி  மெஹ்பூபா முப்தி, "கடந்த ஆறு மாதங்களாக தெற்கு காஷ்மீர் பயத்தில் மூழ்கியிருக்கிறது. ஆளுநர் ஆட்சியிலிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? எந்த நாடும் தன் மக்கள் மீதே போர் நடத்தி வெற்றி பெற முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையின்போது நமது பாதுகாப்பு படையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள தவறி விடுகின்றனர். இந்த வார இறுதி நாளும் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்