மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்; காங்கிரஸ் தலைவர்கள் கைகளை உயர்த்தி வாழ்த்திய சவுகான்!

மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்.

Update: 2018-12-17 09:38 GMT
போபால்,  

 சமீபத்தில் நடந்த மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் சுயேச்சைகள் என மேலும் 7 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 13–ந் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் ஆனந்திபென் படேல் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் புதிய முதல்–மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்றார். போபாலில் நடைபெற்ற  பதவி ஏற்பு விழாவில்  கமல்நாத்துக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  மந்திரிகள் வேறு ஒரு நாளில் பதவி ஏற்க உள்ளனர். நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவே கவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.  கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. மாறாக அக்கட்சியின் தலைவர்கள் இருவர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச மாநில பா.ஜனதா முன்னாள்  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முதல்-மந்திரி கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா கைகளை உயர்த்தி மக்களை நோக்கி அசைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மேலும் செய்திகள்