பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மோசடி; வங்கி அதிகாரிகள் உள்பட 10 பேரை சிபிஐ கைது செய்தது

ரூ.9 கோடி கடன் மோசடி தொடர்பாக வங்கி ஊழியர்கள் உள்பட 10 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

Update: 2018-12-19 15:43 GMT
புதுடெல்லி, 

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து,  இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.  

நிரவ் மோடியும், மெகுல் சோக்‌ஷியும்  பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளை கொடுத்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி  வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தனர். இதேபோன்ற மோசடி மும்பை பிராடி ஹவுஸ் கிளையில்  மீண்டும் அரங்கேறியுள்ளது.  பெல்ஜியம் நாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெறுவதற்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாந்திரி பேப்பர்ஸ் என்ற நிறுவனத்துக்கு பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளை ரூ.9 கோடி மதிப்புள்ள கடன் உத்தரவாத கடிதங்களை வழங்கியது.

அவற்றின் அடிப்படையில், வெளிநாட்டில் ரூ.9 கோடி கடன் வாங்கிய சாந்திரி பேப்பர்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்தவில்லை. இதனால், கடன் உத்தரவாதம் அளித்த பிராடி ஹவுஸ் கிளை மீது அந்த கடன் சுமை விழுந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.  உத்தரவாத கடிதம் வழங்கியபோது  பிராடி ஹவுஸ் கிளையில் பணியாற்றிய அதிகாரிகள் 8 பேரும்,  சாந்திரி பேப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஈஸ்வர்தாஸ் அகர்வால், ஆதித்யா ராசிவாசியா ஆகியோரையும் சிபிஐ கைது செய்துள்ளது.  10 பேரும் வெள்ளிக்கிழமை வரை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்