உங்களுடைய சீருடையை கழற்றுவோம் : போலீசுக்கு பா.ஜனதா தலைவர் மிரட்டல்

மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய சீருடையை கழற்றுவோம் என போலீசுக்கு பா.ஜனதா தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2018-12-24 11:54 GMT
கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதல்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமானது. இடதுசாரிகள், மம்தா கட்சியினர் இடையிலான மோதல்களத்தில் சமீபகாலமாக பா.ஜனதாவும் இணைந்துள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜனதா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜனதாவின் மூன்று பேரணிக்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனை பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய சீருடையை கழற்றுவோம் என போலீசுக்கு பா.ஜனதா தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். 

பிர்பும் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், “என்னுடைய கட்சி தொண்டர்களுக்கு எதிராக போலீசார் தவறான வழக்குகளை பதிவு செய்கின்றனர். உங்களுடைய சீருடையை நாங்கள் கழற்றும் நாள் கண்டிப்பாக வரும். போலீசார் சீருடையை அணிவதற்கு தகுதியற்றவர்கள். போலி வழக்குகள் தொடர்ந்து நீங்கள் எங்களை அவமதிப்பு செய்கிறீர்கள். எல்லாவற்றையும் நாங்கள் பதிவு செய்து வைத்துள்ளோம். எங்களுக்கு எதிராக தவறான வழக்குகளை பதிவு செய்த அதிகாரிகளை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்,” என கூறினார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்