மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் - போலீசார் இடையே பெரும் மோதல்

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மற்றும் போலீசார் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

Update: 2018-12-24 14:10 GMT

கொல்கத்தா,

2019 தேர்தலை குறிவைத்து  மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளையும் தொடர்பு கொள்ளும் வகையில்  ரத யாத்திரை நடத்த பா.ஜனதா திட்டமிட்டது. 158 பொதுக்கூட்டங்கள், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையை தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து ரத யாத்திரை நடத்தவும் முடிவு செய்தது.  பா.ஜனதாவின் ரத யாத்திரைக்கு  மம்தா பானர்ஜி அரசு அனுமதியை மறுத்து விட்டது. 

ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்ற போது ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனுமதி கிடையாது என மாநில அரசு தெரிவித்தது. ஐகோர்ட்டு அனுமதியை மறுத்ததும் உத்தரவை எதிர்த்து பா.ஜனதா சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளது. இதற்கிடையே என்னுடைய கட்சி தொண்டர்களுக்கு எதிராக போலீசார் தவறான வழக்குகளை பதிவு செய்கின்றனர் என்று குற்றம் சாட்டிய பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய சீருடையை கழற்றுவோம் என போலீசுக்கு மிரட்டல் விடுத்தார். 

இந்நிலையில் அவருடைய தலைமையில் பா.ஜனதாவினர் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸ் மற்றும் பா.ஜனதாவினர் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம், கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத வெளிநபர்தான் செங்கலை வீசினர் என பா.ஜனதா கூறியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்