மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இணைப்பு - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இணைப்பு குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-26 17:55 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இணைப்பு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை என்பது 5, 12, 18 மற்றும் 28 என நான்கு அடுக்கு வரம்பு முறைகளில் விதிக்கப்படுகிறது. இதில், 28 சதவீத வரி வரம்பில் ஆடம்பர பொருள்கள் மற்றும் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருள்கள் தவிர்த்து பிற பொருள்களை நீக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி கூறியிருந்தார். மேலும் ஒரே அடுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கொண்டு வருவதே அரசின் இலக்கு என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி-மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், “ஜி.எஸ்.டி.யை 4 அடுக்காக இல்லாமல், ஒற்றை வரியாக இணைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. ஆனால், அது முட்டாள்தனமான யோசனை, நடைமுறை சாத்தியமற்றது என்று நேற்றுவரை மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், இன்று அதே யோசனையை தங்கள் இலக்கு என்ற மத்திய அரசு கூறுகிறது. 18 சதவீதத்தை வரி தாண்டக்கூடாது என்ற காங்கிரசின் கோரிக்கையையும் தங்கள் இலக்கு என்று மத்திய அரசு கூறுகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்