துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மாமியார் சென்னையில் மரணம் - நெல்லூரில் இன்று இறுதிச்சடங்கு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மாமியார் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு நெல்லூரில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

Update: 2018-12-30 21:45 GMT
புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மாமியார் கவுசல்யாம்மா (வயது 80). இவர் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

இது தொடர்பாக வெங்கையா நாயுடு டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “நான் எனது ஒரு வயதில் தாயை இழந்து விட்டேன். அதன் பின்னர் என்னை என் மாமியார் கவுசல்யாம்மாதான், தாய் போல பார்த்துக் கொண்டார். என் 2 குழந்தைகளையும் கூட அவர் அவ்வாறே பார்த்துக் கொண்டார். அவர் பெரும்பாலும் என்னுடன்தான் இருந்தார். டெல்லியில் கடும் குளிர் நிலவியதால் அவர் சென்னையில் உள்ள எனது மகள் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார். அங்கு அவருக்கு திடீரென வலி வந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இப்போது அவர் என்னையும், என் குடும்பத்தையும் தவிக்க விட்டு விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. அவருக்கு ஆந்திர மாநிலம், நெல்லூரில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நான் செல்கிறேன்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்