பயிற்சியாளர் அச்ரேக்கர் உடலை கண்ணீருடன் சுமந்து சென்ற சச்சின்

ரமாகந்த் அச்ரேக்கரின் இல்லத்துக்கு வந்த சச்சின், அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார்.

Update: 2019-01-03 11:32 GMT
மும்பை,

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சிறு வயது பயிற்சியாளர் ரமாகந்த் அச்ரேக்கர். தெண்டுல்கரின் திறமையை வெளி உலகுக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர் இவர் தான்.

தெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் இணைந்து பள்ளி கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து (1988-ம் ஆண்டு) வரலாறு படைத்தனர். அப்போது அவரிடம் தான் இருவரும் பயிற்சி பெற்றனர். அந்த காலக்கட்டத்தில் தெண்டுல்கர் வலை பயிற்சி முழுவதும் அவுட் ஆகாமல் இருந்தால் ஒரு நாணயத்தை அச்ரேக்கர் பரிசாக வழங்குவது உண்டு. இந்த வகையில் அவரிடம் இருந்து தெண்டுல்கர் 13 நாணயங்களை பெற்று பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்து தெண்டுல்கர் உயர்ந்த நிலையை எட்டினாலும், தனது குரு மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். முக்கியமான தருணங்களில் அவரை சந்தித்து ஆசி பெறுவது உண்டு. மும்பையை சேர்ந்த ரமாகந்த் அச்ரேக்கர், ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதிலேயே செலவிட்டார்.

87 வயதான அச்ரேக்கர், வயோதிகம் காரணமாக சில தினங்களாக உடல்நலம் குன்றி இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். தெண்டுல்கர், வினோத் காம்ப்ளியை தவிர்த்து, அஜித் அகர்கர், பிரவின் ஆம்ரே, ரமேஷ் பவார் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் அவரது அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்ரேக்கர் உடலை சுமந்த சச்சின்

இன்று காலை அச்ரேக்கர் உடல் சிவாஜி பார்க் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவரது உடலுக்கு இளம் சிறுவர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து, இறுதி ஊர்வலம் அருகில் இருந்த தகனம் செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில், அச்ரேக்கரின் உடலை சச்சின் தெண்டுல்கர் தோளில் சுமந்து சென்றார். வினோத் காம்பிளி, ரமேஷ் பவார் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்