கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு : அமித்ஷா கண்டனம்

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-05 12:42 GMT
பெங்களூரு

பெட்ரோல், டீசல் விலை அக்டோபர் மாதம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தபோது சில மாநில அரசுகள் வரியை குறைத்தன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.  இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70.85 ஆகவும் டீசல் விலை ரூ.65.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 

இந்த நிலையில், கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை முறையே 28.75, மற்றும் 17.73-சதவீதத்திலிருந்து  32 மற்றும் 21 சதவீதமாக உயர்த்தியுள்ளது.  வரி குறைக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதைச் சரி செய்யவே வரியை உயர்த்துவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது 34 மற்றும் 25-சதவீத வாட் வரி வசூலிக்கப்படுகிறது. கூடுதலாகச் செஸ் வரி ஏதுமில்லை. 

அமித்ஷா கண்டனம், 

பெட்ரோல், டீசல் மீதான வரியை கர்நாடக அரசு உயர்த்தியதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷா தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “கர்நாடகாவின் தற்போதைய ஆட்சியால் விவசாயிகள் இறக்கின்றனர். தலித்கள் துன்புறுத்தப்படுகின்றனர். வரிகளால் எளிய மக்கள் துன்பப்படுகின்றனர். மாநில அரசின் இயலாமைக்காக மக்கள் ஏன் இவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்