எச்.ஏ.எல். நிறுவனத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எச்.ஏ.எல். நிறுவனத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Update: 2019-01-07 23:00 GMT
புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அரசு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் உரிமத்தை அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனத்துக்கு வழங்காமல், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு வழங்கியது தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது தொடர்பாக நேற்றும் அவர் மத்திய அரசை குறை கூறினார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தத்துக்காக பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கி இருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு விமானம் கூட இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.15,700 கோடியை ஏன் இன்னும் வழங்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம் எச்.ஏ.எல். நிறுவனத்தை பலவீனப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, எச்.ஏ.எல். நிறுவனம் பலமாக இருந்தால் அனில் அம்பானி போன்ற யாருக்கும் ஒப்பந்தத்தை வழங்க முடியாது என்பதாலேயே மத்திய அரசு அதை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்