காதலியுடன் பழகியதால் மருமகனை கொலை செய்து பால்கனியில் புதைத்த மாமா கைது

தனது காதலியுடன் மருமகன் பழகியதால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று பால்கனியில் புதைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-01-12 06:40 GMT
புதுடெல்லி

ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜய் குமார் மகா ராணா. நொய்டாவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்., 2012 ஆம் ஆண்டு இவரது காதலிக்கு டெல்லியில் வேலை கிடைத்ததால், தானும் அங்குச் சென்றார்.

துவாரகா பகுதியில், ஒரே பிளாட்டில் தாலிகட்டாமல் இருவரும் வசித்து வந்துள்ளனர். ஐதராபாத்தில் இருந்த பிஜய்யின் மருமகன், ஜெய் பிரகாஷ். வேலைக்காக 2015ம் ஆண்டு டெல்லி  வந்தார். அவரும் பிஜய் குமாருடன்  ஒரே பிளாட்டில் தங்கினார்.

ஜெய் பிரகாஷ், பிஜய் குமாரர் காதலியுடன்  பழகி வந்து உள்ளார். அவருக்கு  மெசெஜ் அனுப்புவது, தனியாக சந்தித்து  பேசுவது என இது தொடர்ந்து உள்ளது.

 தனது காதலியுடன் ஜெய் பிரகாஷ் நெருங்கிப் பழகுவது பிஜய்க்கு தெரிய வந்துள்ளது. இதனால் கோபமடைந்த பிஜய், மருமகனை கொன்று விட முடிவு செய்துள்ளார்.

அதன் பின் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி, தனது காதலி இல்லாத நேரத்தில் பிஜய் மூன்றாவது மாடியில் தூங்கி கொண்டிருந்த ஜெய் பிரகாஷை ரிப்பேருக்கு வந்த சீலிங் பேனால் தலையில் அடித்து கொலை செய்து உள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை வெளியே, பால்கனிக்கு தூக்கி வந்து ஏற்கனவே செய்திருந்த திட்டத்தின்படி, அங்கு தோண்டி, புதைத்துவிட்டு மறுநாள் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து, பால்கனியில் செடிகள் நடப்போகிறேன், அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் சரி என்றார். அதன்படி அங்கு செடிகளை நட்டியுள்ளார்.

ஒரு வாரம் கழித்து நண்பர்களுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த பிளாட்டில் இருந்து காலி செய்த பிஜய், நங்கோலிக்கு குடி பெயர்ந்தார். பின், 2017 ஆம் ஆண்டு ஐதராபாத் சென்றுவிட்டார்.

இதற்கிடையே நொய்டாவில் பிஜய் தங்கியிருந்த பிளாட்டின் உரிமையாளர் விக்ரம் சிங், அதைப் புதுப்பிக்க முடிவு செய்து குழி தோண்டும் போது, நீலநிற சட்டை, பெட்ஷீட், தலையணை, போர்வையுடன் எலும்பு கூடு சுற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் பிஜய் பற்றியும் அவருக்குப் பின் இரண்டு பேர் அந்த பிளாட்டில் வாடகைக்கு வசித்ததும் தெரிய வந்தது.

பிஜய்யின் போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது, பிஜய்யின் எண் மட்டும் கிடைக்கவில்லை. வேலை பார்த்த இடத்திலும் அவர் பற்றி விவரம் தெரியவில்லை. வங்கி கணக்கு உள்பட பலவற்றிலும் பழைய போன் எண் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்ததுள்ளனர்.

பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு ஐதராபாத்தில் அவரை தேடிபிடித்து பின்னர் டெல்லி கொண்டு வந்து விசாரித்த போது, காதலியுடன் நெருங்கி பழகியதால் மருமகனையே கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்