மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த வருடத்தை தவறாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி - எதிர்க்கட்சிகள் கிண்டல்

மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைத்த வருடத்தை தவறாக குறிப்பிட்டது தொடர்பாக மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன.

Update: 2019-01-12 18:30 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற யாத்திரை கொண்டாட்டங்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, தான் ஆட்சிக்கு வந்த 2011-ம் வருடத்தை 1911 என தவறுதலாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் இருந்து ‘1911’ வரை மேற்கு வங்காளம் எந்த வளர்ச்சியும் அடையாமல் இருந்தது. மாநிலம் தற்போது பெற்றிருக்கும் வளர்ச்சி, வளம் அனைத்தும் 1911-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அடைந்ததுதான். எங்கள் கட்சியின் 7½ ஆண்டு ஆட்சியில்தான் மேற்கு வங்காளம் அதிக வளர்ச்சி பெற்றது’ என்று தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை வீழ்த்திய மம்தா பானர்ஜி, கடந்த 2011-ல்தான் முதல் முறையாக ஆட்சியை பிடித்தார். ஆனால் அவர் தவறுதலாக 1911-ம் ஆண்டு என குறிப்பிட்டது விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. மாநிலத்தின் எதிர்க்கட்சிகளான பா.ஜனதாவும், இடதுசாரிகளும் இது தொடர்பாக மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து உள்ளன.

மேலும் செய்திகள்