நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

Update: 2019-01-12 22:15 GMT
புதுடெல்லி, 

நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இதுவரை எந்த பலனும் இல்லை. இதனை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 9-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டத்திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி பின்னர் அரசால் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலங்களில் உள்ள சிறுபான்மை கல்வி நிலையங்கள் தவிர இதர அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களிலும் 10 சதவீதம் நலிந்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களின் குடும்ப வருமானம் மற்றும் இதர பொருளாதார பாதகமான தன்மைகள் அடிப்படையில் இந்த பிரிவினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதேபோல அரசு வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்