பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் உடல்நல குறைவால் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-01-17 10:35 GMT
நொய்டா,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா காய்ச்சலால் அவதிப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) ராம் லால் நேற்றிரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கைலாஷ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதேபோன்று மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த திங்கட்கிழமை சுவாச கோளாறால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை நேற்று சீரானது.  இதனை தொடர்ந்து இன்று அவர் வீடு திரும்புகிறார்.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் அவருக்கு பதில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் கடந்த வருடம் அமெரிக்கா, டெல்லி, மும்பை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.  கோவாவில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ள அவரது உடல்நலம் முன்னேறி வருகிறது.

இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்