சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு: நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகி உள்ளார்.

Update: 2019-01-21 06:28 GMT
புதுடெல்லி

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

சிபிஐ இயக்குநர் தேர்வு, நியமனத்தில் வெளிப்படை தன்மை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகி உள்ளார்.

தேர்வுக்குழு கூட்டத்தில் தான் பங்கேற்க இருப்பதால் விலகி இருப்பதாக ரஞ்சன் கோகாய் அறிவித்து உள்ளார். இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை நீதிபதி சிக்ரி அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்