ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது: சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-01-22 01:16 GMT
அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்துவோம் என்று மத்திய அரசு மிரட்டுவதாக அந்த மாநிலத்தின் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் விடியோ கான்பரன்சிங் மூலம், சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை உரையாடினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- பிரதமர் மோடி எதிர்மறையான தலைவர். அவரது தலைமையின்கீழ் நாடு பின்னோக்கி செல்கிறது. ஆந்திரத்துக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை.

ஆந்திரத்துக்கு வாரா வாரம் ஒரு மத்திய அமைச்சர் வருகை தருகிறார் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆந்திரத்தின் நலனுக்காக அவர்கள் என்ன பணியை செய்துள்ளனர்? ஆந்திராவில்  ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சி யாரும் இங்கு அடிபணிய மாட்டார்கள்.

கொல்கத்தாவில் நடைபெற்ற  பிரமாண்ட பேரணியை போல அமராவதியிலும் நடத்த இருக்கிறோம். இதில் 22 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்” என்றார். 

மேலும் செய்திகள்