டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி, அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடு

டெல்லியில் குடியரசு தினத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-25 15:06 GMT
புதுடெல்லி,
 
டெல்லியில் 70–வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படை ஜெய்ஷ் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் கனய் என்கிற உமைர் (வயது 29), ஹிலால் அகமது பாத் (26) ஆகியோர் டெல்லியில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீநகரில் வெடிகுண்டு வீசப்பட்டதில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் அதேபோன்று தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்துள்ளனர். 

குறிப்பாக லஜ்பத் நகர் மார்க்கெட், ஹஜ் மன்சில், துர்கான் கேட், பஹர்கஞ்ச், இந்தியா கேட், கிழக்கு டெல்லியில் எரிவாயு குழாய் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த தேர்வு செய்திருந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையொட்டி டெல்லியில் 25 ஆயிரம் போலீசார் பல அடுக்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள்,  பயங்கரவாதிகளை அடையாளம் காணும் கேமராக்கள் அணிவகுப்பு செல்லும் ராஜபாதையில் அமைக்கப்படுகிறது. 

இதுதவிர கண்காணிப்பு கேமராக்கள், எதிர்தாக்குதல் படையுடன் ரோந்து வாகனங்கள், விமானங்களை தாக்கும் ஆயுதங்கள், குறிபார்த்து சுடும் வீரர்கள், டெல்லி போலீசாரின் 36 சிறப்பு பெண் கமாண்டோக்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அடங்கிய ரோந்து வாகனங்கள் டெல்லியில் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. ரெயில்வே நிலையங்கள், மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

மேலும் செய்திகள்