எதிர்க்கட்சிகள் அமளி; மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2019-02-06 18:11 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும் அவை தலைவர் வெங்கையா நாயுடு, முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பெயர் கொடுத்துள்ள எம்.பி.க்களின் பெயர்களை வாசிக்க தொடங்கினார். அவர் பேசி முடிப்பதற்குள் குடியுரிமை திருத்த சட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை உறுப்பினர்கள் எழுப்பி கோஷம் போட்டனர்.

இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் அவை மீண்டும் கூடியதும் ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் கல்வி நிலையங்களில் துறைவாரியாக வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு முறை உள்ளிட்ட சில நடவடிக்கைகளை எதிர்த்து குரல் எழுப்பினர். கோரிக்கை அட்டைகளுடன் மையப்பகுதியில் நின்று கோஷம் போட்டனர். அவர்களை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் மற்றும் மத்திய மந்திரிகள் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இடஒதுக்கீடு முறை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அமளியாக இருந்ததால் துணை சபாநாயகர் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்