எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கவே ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை: மம்தா பானர்ஜி சொல்கிறார்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கவே ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-02-07 03:39 GMT
கொல்கத்தா, 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கவே ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரிக்கும் விவகாரத்தில் தர்ணா போராட்டம் நடத்தி, தேசிய அளவில் பரபரப்பை அண்மையில் மம்தா பானர்ஜி ஏற்படுத்தினார். 

இந்த நிலையில், ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா, “ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்காகவே இது போன்று நடத்தப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன” என்றார். 

ராபர்ட் வதேராவிடம் விசாரணை ஏன்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்தில் ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் 1.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.17 கோடி) மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என குற்றம் சாட்டிய வதேரா, தன் மீது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இந்த வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு கோர்ட்டில் அவர் மனுத்தாக்கலும் செய்தார். இதை விசாரித்த கோர்ட்டு, வதேராவை கைது செய்ய 16–ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைக்கு வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், இதற்காக 6–ந் தேதி (நேற்று) அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

அதன்படி நேற்று டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராபர்ட் வதேரா வந்தார். அவரிடம் ஐந்து மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இன்றும் ராபர்ட் வதோராவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. 

மேலும் செய்திகள்