விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை என பா.ஜனதா போராட்டம்

ராஜஸ்தானில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

Update: 2019-02-08 12:06 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியை முன்வைத்து போட்டியிட்ட காங்கிரஸ், வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது. ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்தது. இதற்கான விதிமுறைகள் மற்றும் பயனாளர்கள் யார் என்பதை அடையாளம் காண சிறப்பு கமிட்டியை அரசு நியமித்தது. விவசாயக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்க 7-ம் தேதி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாகவே முகாம்களை காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ளது, காங்கிரஸ் அரைமனது கொண்ட முயற்சிகள் மூலம் விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கிறது என பா.ஜனதா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் பா.ஜனதா தரப்பில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால் அதனை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து விட்டது என பா.ஜனதா தலைவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்