‘தனிநபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

தனிநபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-02-11 09:13 GMT
புதுடெல்லி,

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதல்வர்  சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு விலகியது. 

பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். முன்னதாக ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நடைபெறும் இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இரவு 8 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

உண்ணாவிரத போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

இந்த போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதனை எப்படி பெறுவது என எங்களுக்கு தெரியும். இது ஆந்திர மக்களின் சுய மரியாதை சம்மந்தப்பட்ட பிரச்சினை. எங்களது சுயமரியாதை மீது நீங்கள் எந்த வகையிலாவது தாக்குதல் நடத்த நினைத்தால் அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தனிநபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமரையும் பாஜகவையும் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சந்திரபாபு நாயுடு போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திமுக கட்சியில் இருந்து திருச்சி சிவா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து டெர்க் ஓ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்