மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-02-12 21:00 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடை அடைக்கப்பட்டது.

இன்று முதல், 17-ந்தேதி வரை அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, படிபூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெறும். அதன்பின்பு 17-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். சபரிமலையில் இளம் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்